Tuesday, July 28, 2009

சமயமும் கலையும்

மக்களின் பண்பாட்டுக்கு உறுதுணையாக அமைந்துள்ள சாதனங்களுள், நுண்கலைகள் சமயத்துக்கு அடுத்தபடியில் வைத்து எண்ணப்படும் தகமையுடையன. சாஹித்திய தருப்பண நூலாசிரியராகிய விசுவநாதர் ~~இராசானுபவம் என்பது பிரமானுபவத்துக்கு அடுத்தநிலையாகும்.~~ என்கின்றார். இரசித்தல் என்னும் பதத்தின் சாதாரண பொருள் திருப்தியடைதல் என்பதாம். கருமேந்திரியங்கள் வழியாக புலன்கள் (பூரண) திருப்பதியடைவதனால் ஏற்படும் இன்பம் இலௌகீகமானது; கால எல்லைக்குட்பட்டது. ஆனால் மனோலயத்தின் மூலம் அடையும் ஆனந்தம் இரசானுபவம் எனப்படும். இவ்வனுபவம் புறத்தே இருந்து மனத்துள் புகுவதன்று. ஜட சம்மந்தத்தால் ஏற்படுவதன்று - சித்தத்துள் மலர்ந்து பிரகாசிப்பது. புலன்களால் அடையும் இன்பம் வேறு; உள்ளத்தின் மலர்ச்சியால் ஏற்படும் ஆனந்தம் வேறு. புலன்கள் வழியாகத் தோன்றும் இன்பம் சுயநலப் பற்றுடையதுமன்றிச் சிறிது நேரத்துள் மறையும் தரத்தது. சிந்தை அழகினை நுகர்வதனால் ஏற்படும் ஆனந்தம் ஆத்மாவின் பிரபையை விசாலிக்கச் செய்கின்றது.நுண்கலைகளின் மூலம் ஆனந்தத்திலே திழைத்து நிற்கும் ஆன்மா, தனது சொந்த சொரூப நிலையில் நிற்கும்.
பேரின்பம் அல்லது சிவானந்தம் மனதில் விவகாரங்களுக்கு அதீதமான நிலையில் ஏற்படும் அனுபவமே பேரின்பம், அல்லது சிவானந்தம் எனப்படும். அது எல்லாவற்றையும் கடந்தது. எவராலும் அளத்தற்கரியதாய், முடிவற்று நிற்பது. உபநிடதங்கள் பிரம்மமே ஆனந்தம் என்று உரைக்கும். தைத்திரிய உபரிடதம் ~~பிரமமே ஆனந்தமாக அறியப்படுவது. சீவராசிகள் யாவும் ஆனந்தத்தின் நின்றே தோன்றுகின்றன. அப்படித்தோன்றிய யாவும்,ஆனந்தத்திலும்,ஆனந்தத்தாலும் வாழ்கின்றன. அவை மேலோங்கிச் சென்று ஆனந்தத்தையே அடைகின்றன என்று கூறுகின்றது. மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்திற் கடவுளை ~ஆனந்தன~; எனக் கூறி வாழ்க்கையில் பெறும் அமிர்தமான பொருள்களுக்கு அவரை ஒப்பிடுகின்றார்.
~~அமுதளித்தூறு மானந்தன்~~~~கோதிலாவமுதே~~ ~~நெல்லிக் கனியைத் தேனைப் பாலை~~ ~~நிறையின் னமுதை அமுதின் சுவையை~~என்று பாடிப் பரவசப்படுகின்றார். தேவாரத்தில் இறைவனை ~~ஏழிசையாய், இசைப்பயனாய்~~ என்றும் ~~பாட்டில் பண்ணாய்~~, ~~பழத்தின் இரதமாய்~~ என்றும் கூறுவதும் காண்க.

~ஆத்மானந்தம்~, ~சிவானந்தம்~ ஆகிய இரு பதங்கள், கலை, சமயம் என்பவற்றின் உண்மைப் பொருளையும் நோக்கத்தையும் வெளியாகக் காட்டுவனவாகும். இந்திய நுண்கலைகள் யாவும் மனஅமைதியை ஏற்படுத்தி ஆன்மாவின் இன்ப நிலையைப் பிரகாசிக்கச் செய்யும் கருவிகளாகும். ~~வெண்மைப் பிரகாசம் பொருந்திய நித்திய வஸ்து பல வர்ணக் கண்ணாடிகளுக்கூடாக தோன்றும் தன்மைதான் கலை என்பது~~ என்று ஆங்கிலக் கவியாகிய ஷெல்லி கூறுகின்றார். வர்ணக் கண்ணாடிகளாகிய நுண்கலைக்கூடாக, நித்திய வஸ்து பிரகாசிக்கும்பொழுது ஏற்படும் பல வர்ணப் பிரகாசமே கலையாகும். நித்திய வஸ்துவின் பிரகாசம் சங்கீதம், நடனம்,சிற்பம்,ஓவியம் என்பவற்றின் மூலம் அனுபவிக்கப்படுங்கால் அது கலையனுபவம் எனக் கூறப்படும். பல வர்ணக்கண்ணாடிகளாகிய கலைக்களுக்கூடாகவன்றி அப்பிரகாசத்தை நேரே தரிசிக்கப்பெறின், அவ்வனுபவப் பேறே சிவானுபவம் எனப்படும்.

கவிஞர்களும் கலைஞர்களும் உண்மையான கலை புதிய உணர்ச்ச்சியை அளிப்பதும், உயரிய நோக்கத்தை இலக்காக கொண்டதாயுமிருக்கும். இயற்கை உருவங்களை கண்ணுக்குத் தோன்றும் விதத்தில் அப்படியே அமைத்து விடுவதுதான் கலையின் நோக்கம் எனக் கொள்ளுதல் தவறான கருத்தாகும். சாதாரண மக்களின் உள்ளத்தில் இல்லாத உணர்ச்சிகளை, ஒரு கலைஞன், தான் சிருட்டிக்கும் பொருள்கள் மூலம், அவர்களிடத்தே தோற்றுவிக்கின்றான். அக் காரணம் பற்றித்தான் கலையானது புதிய உணர்ச்சிகளை ஏற்படுத்தும் கருவியெனக் கொள்ளப்படுகின்றது. கவிஞர்களும்,கலைஞர்களும் இயற்கைக்குப் பின்னால், ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் உண்மைப் பொருளுடன் ஒன்றுபடும் ஆற்றல் உடையவர்கள் ஆவர். அவர்கள் தமது ஒப்பற்ற உன்னத, உண்மைக் காட்சியிற் கண்டு அனுபவிக்கும் இன்பப்பேற்றை பிறரும் அனுபவித்து இன்புறும் வண்ணம் கவிகளாகவும், ஓவியங்களாகவும், இன்பவடிவங்களாகவும் அமைக்கின்றார்கள். இந்துக்களின் தத்துவ ஞானக்கருத்தின்படி, நமக்குத் தென்படும் பிரபஞ்சம் உண்மையானதன்று. உண்மை வஸ்து காணப்படும் பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்டது. கலைஞனும், ஞானியுமே அதனுடன் கலந்து உறவாடுகின்றனர். ஆனால் சாதாரண மக்கள் கலைவல்லான் அமைக்கும் பொருள்களின் துணைக்கொண்டே உண்மைப் பொருளின் தன்மையை உணர முயல்கின்றனர்.

இந்தியாவில் நுண்கலை வல்லார், சமய ஆசாரியர்கள் நிலையில் வைத்து மதிக்கப்பட்டு வந்தனர். பேரின்பநிலையடைந்த ஞானிகள் கண்டனவற்றை, நுண்கலைஞன் திருவடிவங்களிலும,; ஓவியங்களிலும் விளங்கவைத்தான். இந்நிலையைப் பெறுவதற்கு கலைஞன் தியான யோகம் கைவரப்பெற்ற சமய ஒழுக்கமுடையவனாய் வாழவேண்டியதாயிற்று. ஏனெனில் ஞானி கண்ட உயர்ந்த அனுபவங்களை, கலைவல்லோன் சாதனையும், ஒழுக்கமுமின்றி வாழமுடியாது. பல்வேறு சமயச் சார்பினரின் சாஸ்திரங்களிற் கூறப்பட்டுள்ள உயர்ந்த அனுபவங்கள், நுண்கலை வல்லோனது உயிர்த்தத்துவம் வாய்ந்த கைவன்மையால் கண்ணாற் பார்த்து வழங்கப்படும் வடிவங்களாயின.

கலையின் அடிப்படையான நோக்கம். இந்துக்களது நுண்கலைகளின் அடிப்படையான நோக்கம் சமய சம்பந்தமானது. சமய பக்தியையும் கடவுள் வணக்கத்தையும் வளர்ப்பதற்கு அக்கலைகள் சாதகமாக அமைந்துள்ளன. சங்கீதமும், தோத்திரமும் பக்தியை வளர்ப்பதற்கு வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடியன. சிற்ப வடிவங்கள் வணக்கத்திற்கும் தியானத்திற்கும் அவசியமான சாதனங்களாக அமைந்துள்ளன. சிறிது பொழுதுக்குக் குறிக்கப்பட்ட ஓரிடத்திலிருந்து தியானஞ் செய்ய விரும்பும் ஒருவரின் மனத்தில், தேவாரப் பண்ணின் இன்னிசை எவ்வளவு சாந்தியைக் கொண்டுவருகின்றது? இதை எவர்தான் மறுக்கமுடியும்? நடராஜப்பெருமானின் திருவுருவத்துக்கு முன்பு ஒருவன் தன்னையும் தன்சூழ்நிலையையும் மறந்து பலமணிநேரம் அமைதியோடு நிலைத்தல் இயலும். சிதம்பரத்திலுள்ள நடராஜப்பெருமானைத் தரிசித்த அப்பர் சுவாமிகள்தன்னை முற்றாய்மறந்து பரவசப்பட்டு தம் அனுபவத்தைப் பின்வரும் பாட்டில் அமைத்துள்ளார்.

குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே

கண்களைக் கவரும் அழகிய திருவுருவங்களின்றிக் கிரியா வழிபாடும், ஏனைய சடங்குகளும் நடப்பதென்பது முற்றாய் முடியாத காரியமாகும் என்பதை நாம் மறத்தல் கூடாது. இந்து சமயத்திற் திருவுருவ வழிபாடும் ,இதற்கு அப்பால் பட்ட அருவ வழிபாடும் ஒருங்கு சேர்ந்து செல்வன. மனாதிகட்கெட்டாத அனுபவங்களை நுண்கலைகள் மூலம் தெளிவாக அனுபவிக்கலாம். ஏகவஸ்துவாகிய பரம்பொருளின் இயற்கை நிலை மனிதனால் அளந்தறிய இயலாதது. அப்பாற்பட்டதாய் இருந்தாலும் சமயம், நுண்கலைகளைச் சாதனமாகக் கொண்டு, கண்டமானதிற்கும் அகண்டமானதிற்கும் இடையில் பாலம் அமைக்க முயல்கின்றது. இதனைக் காரணமாகக் கொண்டுதான் இந்து தத்துவ ஞானிகள், சமய வழிபாட்டு முறைகளை நுண்கலைகளுடன் தொடர்புபடுத்தி வைத்தனர். ஆனால் இந்துசமய பாரம்பரியத்தில் வந்துள்ள நாங்கள் எங்கள் அடிப்படையான உண்மைகளை மறந்து, செல்வப்பெருக்கிற் கண்ணும் கருத்துமாக நிற்கும் மேலைத் தேச மக்களைப் பின்பற்றி, சமயத்தை நுண்கலைகளினின்றும் வேறாகப்பிரித்து வைக்க முயல்கின்றோம். கலையை இரசிப்பதற்காக நாம் இன்று திகதி அட்டவணைகளில் காணப்படும் மேனாட்டு முறையி;ல் வரையப்பெற்ற ஓவியங்களை வீடுகளில் வைத்து மகிழ்கின்றோம். இந்தப் போலி நிலை நீங்க வேண்டும். இந்து சமுதாயத்தில், நுண்கலைகள் ஆத்மீக வாழ்க்கையை வளர்த்தற்குரியனவாக அமைதல் வேண்டும். பண்டைய தமிழ் நாட்டிற் கலைகள் அவ்விடத்தைத்தான் பெற்றன.

மேனாடுகளிற் பெருமதிப்பு இந்திய நுண்கலை வல்லோர் என்றும் அழியாது நித்தியமாக உள்ள சமய உண்மைகளை சித்திரித்துக் காட்டுவதில் நிகரற்றவர்களாக விளங்கினார்கள். நடராஜப்பெருமானினதும் சுந்தரமூர்த்திசுவாமிகளினதும் வடிவங்கள் போன்றன உலகின் வேறெந்த நாட்;;டிலும் காண்பதரிது. உலகப் பெருமை வாய்ந்த நுண்கலை நிபுணர்களின் பாராட்டுக்களை இவைகள் பெற்றுள்ளன. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இந்திய நுண்கலைக்கு விசேச மதிப்பு நடராஜ வடிவத்தால் ஏற்பட்டதாகும். அதைக்கண்ட பின்னரே மேலைத்தேசக் கலைநிபுணரும்; விமரிசனர்களும்; இந்தியாவின் அழகு வாய்ந்த திருவுருவங்களை ஆவலுடன் ஆராயத் தொடங்கினார்கள்;. நடராஜவடிவத்தில் சமயமும் விஞ்ஞானமும் கலந்து காட்சியளிக்கின்றன. இவ்வடிவம் சிவபெருமானின் பஞ்சகிருத்திய நிலையைத் தெளிவாக விளக்கிக் காட்டுகின்றது. மனவாசகம் கடந்தார் நடராஜவடிவத்தின்;; கருத்தை மிகத் தெளிவாப் பின்வரும் கவியில் விளக்குகிறார்:

தோற்றந் துடியதனிற் றோயுந் திதியமைப்பிற்சாற்றியிடு மங்கியிலே சங்கார - மூற்றமாவூன்று மலர்ப்பதத்தி லுற்றதிரோ தானமுந்திநான்ற மலாப்பதத்தே நாடு

டாக்டர் ஆனந்தகுமாரசுவாமி அவர்கள்;; நடராஜ வடிவத்தைப் பற்றி கூறியதை இங்கு தருவது பொருத்தமாகும்:

~இவ்வடிவத்தின் ஒவ்வொரு பகுதியும் நேரே மனத்தின் கண் எழும் உணர்ச்சிகளைக் குறித்துக் காட்டுவது. இது பொய்க்கதையன்று. முற்றும் வெளிப்படையான உண்மை. இன்று பெயர் பெற்று வாழும் எந்த நுண்கலை வல்லோனும் எல்லா அற்புதங்கட்கும் அப்பாலாய்;

விஞ்ஞானத்திற்கு .இன்றியமையாததாய்த் தோன்றும் அந்தப் பெரிய சக்தியை இவ்வளவு நுண்ணிய புத்தியுடனும் திறமையுடனும்; உருவத்தில் அமைத்துக் காட்டுவது இயலாத செயலாகும். ~பிரமா நித்திரை செய்யும் இராக் காலத்தில் பிரபஞ்சம் இயங்காதிருக்கும். சிவன் அருளும் வரையும் ஒன்றும் அசையமாட்டாது. ஆனந்தங் கொண்டு அவர் எழுந்து தாண்டவம்; புரிய நாத அலைகள் ஓசையை எழுப்புகின்றன. அவரைச்சுற்றி எல்லாம் இயங்குகின்றன. பலதிறப்பட்ட பிரபஞ்சத்தை அவரே தாங்கி நிற்பவர் நடித்துக் கொண்டு நிற்கும்; சிவன்; உகரந்த காலம் வந்தவுடன் எல்லா நாமரூபங்களையும் அழித்து ஆன்மாக்களை ஆறுதல் அடையச் செய்கின்றார். இது கவியின் ஒப்பற்ற சிருட்டி மாத்திரமன்று விஞ்ஞானத்தின் முடிவுமாகும~;. அகஸ்றே என்ற புகழ்பெற்ற சிப்பி நடராஜ வடிவத்;;;;தை பற்றி கூறுவதாவது ~இந்திய நாட்டின் நடராஜவடிவம் வீனஸ் டி மெடிசி என்ற உருவத்திலும் சிறப்புவாய்ந்தது. வீனஸ் டி மெடிசி தனது அழகை கைகள் மூலமே காட்டுகின்றது. ஆனால் நடராஐவடிவம் அதனை தனது அங்கஅபிநயங்களாற் காட்டுகின்றது~.

நிகரற்ற இந்தியச் சிப்பி சிவானுபூதி பெற்ற அடியார்கள் அடைந்துள்ள பேரானந்தநிலையையும் மனஅமைதியையும் படம்பிடித்தாற் போல் நமக்கு சித்திரித்துக்காட்டும் திறமையும் இந்தியச் சிப்பிக்கு எவரும் நிகராகார்.கொழும்பு நகரின்கண்ணுள்ள நூதனசாலையில் வைக்கப்பட்டிருக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வடிவம் உலகின்கண்ணுள்ள சிறந்த சிற்பவடிவங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

இவ்வடிவத்தைப்பற்றி வில்லியம் றோத்தென்ஸ்ரீன் என்னும் ஆங்கில கலைப்புலவர் பின்வருமாறு கூறுகின்றார். ~நடராஐ வெண்கல வடிவத்தைப்போல அல்லது ஆனந்த உணர்ச்சி ததும்பும் சுந்தரமூர்த்திசுவாமிகளின் வடிவத்தைப்போல சீனதேசத்துச் சிப்பி எவனும் திறமைவாய்ந்த வடிவத்தை அமைத்தான் இல்லை~. இவ்வடிவம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறைவன் சந்நிதியில் பேரானந்;தத்திற் பரவசப்பட்டு நிற்கும் நிலையைக்குறிக்கின்றது. சிவசந்நிதியில் தன்னைமறந்து பேரின்பசுகத்தில் நிற்கும் நிலையை அவ்வடிவம் விளக்கிக் காட்டுகின்றது கைகளைத் தூக்கிப்பிடித்தபடி கால்களை நிதானமாக நிலத்தல் வைத்தபடி அமைந்துள்ள அவரது முழுவடிவமும் ஆத்மா அதியற்புதமான பேரானந்தத்தை அனுபவிக்கும் நிலையை வெளித்தோன்றக் காட்டுகின்றது. சருமத்தின் பசுமையும் அங்கங்களின் மென்மையும் இன்பநிலையைக் காட்டவல்ல முறையில் அமைந்துள்ளன. சேக்கிழார் சுவாமிகள் தமது பாட்டில் சித்திரித்துக் காட்டியதை சிற்பி தனது கலைத்திறமையால் பஞ்சலோக வடிவத்தின்மூலம் உருவகப்படுத்திக் காட்டுகின்றான். ஐந்து பேரறிவும் கண்களேகொள்ள அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவீகமே ஆக, இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லையும் தனிப்பெரும் கூத்தின், வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறில்லா மகிழ்ச்சியில் மலர்ந்தார். தென்னிந்திய சிற்பிகளின் பெருமையைக்குறித்து ஒரு கலைநிபுணர் பின்வருமாறு கூறுகின்றார்.

~~அவர்களை அறிந்து அவர்கள் பெருமையை உணர்வதானது புதியகலையுலகிற்குள் எம்மைப்புகுத்துவதாகும் அவர்கள் அமைத்துள்ள கலைவடிவங்களை போன்றனவற்றை திறமையாக அமைக்கப்பெற்ற கிறேக்க வடிவங்களில் ஆவது அல்லது இடைக்காலத்தில் எழுந்த உருவங்களில் ஆவது காண்பது அரிது~~. கோயில்கள் கலைக்கருவூலங்கள் புராதன இந்தியாவிலிருந்த கோயில்கள் கலைக்கருவூலங்களாக விளங்கின. இசை, நடனம் சிற்பம் ,ஓவியம் என்பன மக்களின் வாழ்க்கையைச் செழிப்பும் சிறப்பும் அடையச் செய்தன. அக்காலத்தில் கலைகள் கலைக்காக மட்டும் அமைக்கப்பட்டனவல்ல. மக்களின் மனதில் அமைதியையும் தெய்வபக்தியையும் ஒழுக்கவாழ்வில் விருப்பையும் உயர்ந்த நோக்கத்;தையும் ஏற்படச்செய்வதற்குச் சாதனங்களாகவே கலைகள் அமைந்தன.

சமயத்தைப்போல நுண்கலைகளும் மக்கள் எண்ணங்களிலும் வாக்கிலும் செயலிலும் துய்மையை எற்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு விளங்கின. ஆகவே நாமும் இன்று நுண்கலைகளைச் சமயத்தொடர்புடையனவாகச் செய்வதால் மாத்திரமே இந்துக் கலாச்சாரத்தை புத்துயிர்பெற்று விளங்கச் செய்யலாம்;. நுண்கலைகள் சமயத்தில் இருந்து வேறாகப் பிரித்து எடுக்கப்படின் அது இழிவடைந்து இலௌகீக தன்மை பெற்று சிற்றின்ப நுகர்ச்சிக்கான சாதனங்களாக அமைந்தவிடும் அந் நிலைக்குத்தான் இன்று எங்கள் நாட்டில் கலைகள் சென்று கொண்டிருக்கின்றன. மனிதன் இயற்கையிலேயே சமய விசயங்களிலும்பார்க்க கலைகளில்தான்.மிக்க ஆர்வமும் விருப்பமும் உடையவனாக விளங்குகின்றான்.

இக்காரணம் பற்றியே கடவுள் வழிபாட்டிலும் சமயக்கிரியைகளிலும் நுண்கலைகளை நெருங்கிய தொடர்புடையனவாக அமைத்து வைத்தனர். மனிதன் மாட்டுப்பண்பாடு இனிது அமைவதற்குள்ள - எழுச்சிகளே இன்றியமையாத வேண்டப்படுவன. எனவே நமது நாளாந்தர வாழ்க்கையில் சமயம் வன்மையான இடம் பெற வேண்டின் ஒவ்வொருவரும் கூடியளவுக்கு உள்ளப்பண்புடையவராக வளர்ச்சிபெறுதல் வேண்டும். உள்ளப்பண்பு கலைகளின்மூலம் சித்திப்பது சுலபம் நுண்கலைகளுக்கு விசேஷ இடம் அளிக்காத சமயம் உள்ளப்பண்பை வளர்க்கும்ஆற்றல் அற்றதாகும.; நுண்கலைகளும் சமயத்தைப்போல் ஆத்மீகவாழ்வை வளர்க்கும் நோக்கத்தை உடையனவாக வேண்டும். இந்துக்களும் இந்து நிலையங்களும் இந்து சமய பண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட சமய வாழ்வை நாட்டில் வளர்க்க முயற்சிக்கவேண்டும். எனவே சமய வளர்ச்சியில் ஆத்மீக நோக்குடைய கலை முதலிடம் பெறவேண்டும் என்பது சொல்லாமலே விளங்கும்.

நன்றி ஈழகேசரி வெளியீடு

No comments:

Post a Comment