Monday, May 6, 2013

சமயமும் கட்டடக்கலையும்....அ.சி.உதயகுமார்

1.இந்தியா, இலங்கை என்பவைகளில் கட்டிடக் கலையானது சமயங்களின் அடிப்படையில்தான் மிகப் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில், இந்த நாடுகளின் கட்டிடக்கலையினை பின்வருமாறுதான் பெரும் பிரிவுகளாகப் பிரிக்கவேண்டியுள்ளது: 1) பௌத்த கட்டிடக்கலை: 2) இஸ்லாமியக் கட்டிடக்கலை; 3) கிறீஸ்தவக் கட்டிடக்கலை 4) நவீனக் கட்டிடக்கலை. 

வேதங்களை அடிப்படையாகக் கொண்டவர்கள் அக்கினி குண்டங்களைத்தான் கொண்டிருந்தனர். ஆகவே, அவர்களது கட்டிடக்கலையானது வீடுகள் கட்டுவதுடன் நின்றுவிடுகிறது. கோயில்கள் அவர்களுக்கு இருந்ததில்லை! 

Sunday, May 5, 2013

யாழ்ப்பாணச் சமூகப் பாரம்பரியத்தில் கட்டடம் பற்றிய எண்ணக்கரு


சமூக அறிவு
தொகுதி -1 ஆடி - 2004 இதழ் - 1, 2
கார்த்திகேசு சிவத்தம்பி


ஈழத் தமிழ்ச் சமூகத்திக் பல்வேறுபட்ட தனித்துவ அம்சங்கள் போன்றே, அதன் கட்டட நிர்மாணமும் இதர சமூகங்களுக்கில்லாத சில தனித்துவ இயல்புகளைக்கொண்டதொன்றாகும். இத்தகைய இயல்புகளைக் முன்கொணரும் ஒரு முன்னோடி முயற்சியாக இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது. இம்முயற்சியின் சிறப்புக்களமாக யாழ்ப்பாணச் சமூகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணச் சமூகம் பற்றிய ஒரு சுருக்கக் குறிப்பினைத் தொடர்ந்து கட்டடங்களை வசிப்பிடம் சார்ந்தவை, கோயில் சார்ந்தவை, பொதுநிலை சார்ந்தவை என்று பாகுபடுத்தி அவற்றின் தன்மைகளை கட்டுரை ஆராய்கிறது. உரியவிடத்து வரைபடங்கள் கொண்டு விளக்கங்கள் தெளிவுபடுத்தப்படுகின்றது.

யாழ்ப்பாணச் சமூகம்

இவ்விடயம் பற்றிய எடுத்துரைப்பினை தொடங்குவதற்கு முன்னர், யாழ்ப்பாணச் சமூகப் பாரம்பரியம் என எதனைச் சுட்டுகிறேன் என்பது முக்கியமானதாகும்.

யாழ்ப்பாணத்துப் பாரம்பரியச் சமூகம் என்பது 'சமூகப் பாரம்பரியம்' எனக் குறிப்பிடுவதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. யாழ்ப்பாணத்துக்குரிய சமூக ஒழுங்கமைவு முற்றிலும் பிராமணிய முறை சாராதது. ஆதலால், சாதி மேன்மை, சாதி ஆதிக்கம் என்பன கிராமத்துக்கு கிராமம், பெரும் பாகங்களுக்குப் பெரும் பாகம் (division) வித்தியாசமாயிருப்பது உண்டு.